110 ஆண்டுகளுக்கு முன்பு...
வரலாறு காணாத உலகப் போர் வெடித்தது. மற்றொரு வரலாறு காணாத நிகழ்வும் நிகழ்ந்தது. The PHOTO DRAMA OF CREATION திரைப்படம் திரையிடப்பட்டது; அது 1914ம் ஆண்டை என்றும் மறக்க முடியாத ஆண்டாக மாற்றியது!
இருபதாம் நூற்றாண்டு உதயமானதும் பல புதிய சமுதாய மற்றும் மத ரீதியான மாற்றங்களும் பிரகடனம் செய்யப்பட்டு வந்தன. நவீனத் தத்துவங்களும், மனித நேய தத்துவங்களும் மதம்சார்ந்த சிந்தனையின் மீது கட்டுப்பாட்டைப் பெற ஆரம்பித்திருந்தன. நவீன சிந்தனைகளின் போக்கு வேதவசனங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியது, இது பலரை வேதாகம விமர்சனம் மற்றும் அவிசுவாசத்தை நோக்கி வேகமாக நகர்த்தியது.
வேதாகமத்தின் மீதான நம்பிக்கை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு, முதலாம் உலகப் போருடைய பயங்கரமான நிகழ்வுகள் உலகத்தையே உலுக்க ஆரம்பித்திருந்த அந்தச் சமயத்தில், The PHOTO DRAMA OF CREATION, உலகம் இதுவரை கண்டிராத மிகவும் குறிப்பிடத்தக்க மதம் சார்ந்த காட்சிகளைக் காட்சிப்படுத்தியது.
வரலாற்றில், அன்று நடந்த காட்சியைச் சற்று கற்பனை செய்து பாருங்கள்: ஒலியில்லாத ஊமைப்படங்களே திரையிடப்பட்டு வந்த சமயத்தில், ஜனவரி 1914ல், நியூயார்க் நகரத்தில் மேற்கு 63வது வீதியில், ஒரு கட்டிடத்தில் பார்வையாளர்கள் கூடியிருந்தனர். பார்வையாளர்களுக்கு முன் ஒரு பெரிய படத் திரை காணப்பட்டது. அவர்கள் கவனத்தோடு உற்று நோக்கிக் கொண்டிருந்தபோதே, அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஒன்று நடந்தது. 60 வயது மதிக்கத்தக்க நரைத்த முடி கொண்ட மாண்புமிகு மனிதர் ஒருவர் திடீரென்று திரையில் தோன்றினார். அவரது உதடுகள் அசைய அசைய, அவருடைய வார்த்தைகளும் சத்தமாக கேட்கலாயின! அங்கிருந்த 5,000 பார்வையாளர்களும் திகைப்புடன் அமர்ந்திருந்தனர்.
இந்தப் பிரமிக்க வைக்கும் தயாரிப்பானது, ஒத்திசைக்கப்பட்ட ஒலி, நகரும் படம் மற்றும் வண்ண ஸ்லைடுகள் என அனைத்தும் ஒருங்கே உள்ளடக்கிய முதல் பெரிய திரைக்கதை (the first major screenplay) என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த அற்புதமான விளக்கக்காட்சியானது, பூமியினுடைய சிருஷ்டிப்பில் ஆரம்பித்து, 49,000 வருட உலக சரித்திரத்தின் ஊடாக கொண்டு சென்று, பூமி மற்றும் மனுக்குலத்திற்கான தேவனுடைய நோக்கத்தின் உச்சக்கட்டமாகிய கிறிஸ்துவின் ஆயிர வருட அரசாட்சியின் முடிவு வரைக்கும் அழைத்துச் சென்றது. இதற்கு முன் ஒருபோதும் இது போன்ற ஒலியும் வண்ணமும் ஒருங்கே இணைக்கப்பட்ட “முழு நீள” தயாரிப்பொன்று இருந்ததில்லை; இந்தத் தயாரிப்பு தொழில்நுட்ப ரீதியில் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது மட்டுமல்லாமல், தொடர்ச்சியாக பார்வையாளர் வருகையிலும்கூட மிகப்பெரிய சாதனை படைத்தது. 1914ன் முடிவில், வட அமெரிக்கா, ஐரோப்பா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 9,000,000க்கும் அதிகமான மக்கள் முன்னிலையில் “Photo-Drama” காட்சிப்படுத்தப்பட்டது.
சிருஷ்டிப்பின் புகைப்பட நாடகம் நான்கு பகுதிகளாக காட்டப்பட்டது. இது, மிருகங்கள், மனிதன் சம்பந்தப்பட்ட பூமியின் சிருஷ்டிப்பு, கடந்த ஆறாயிரம் ஆண்டுகளாக மனுக்குலத்தின் அனுபவங்கள் மற்றும் மேசியாவின் ஆயிரமாண்டு இராஜ்யத்தின் வேலை என்பது தொடர்பான காரியங்கள் அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது. அசல் புகைப்பட நாடகம் உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட படங்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும், அதில் விவரங்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு, ஸ்லைடுகளோடும், நகரும் படங்களோடும் ஒன்றிணைத்துக் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தின் நீளம் எட்டு மணிநேரம், ஒவ்வொன்றும் இரண்டு மணிநேரம் என நான்கு பாகங்களாக காட்டப்பட்டன.
பாகம் ஒன்று, நெபுலா நட்சத்திரத்தில் ஆரம்பமாகி, உலகத்தின் சிருஷ்டிப்பு, ஜலப்பிரளயம், ஆபிரகாமின் காலம் என்பது வரைக்கும் நம்மைக் கொண்டு செல்கிறது. பாகம் இரண்டு, எகிப்திலிருந்து இஸ்ரயேலின் விடுதலை, வனாந்திர அனுபவங்கள் என ஆரம்பமாகி, இராஜாக்கள் மற்றும் தீர்க்கதரிசியாகிய எலிசாவின் காலம் வரைக்கும் செல்கிறது. மூன்றாம் பாகம் தானியேலின் காலம் துவக்கி, லோகோஸ் மாம்சமான காலமாகிய இயேசுவின் பிறப்பு, அவருடைய சிறுவயது, வாலிபப் பருவம், ஞானஸ்நானம், ஊழியம், அற்புதங்கள், சிலுவையில் அறையப்படுதல், மரணம், உயிர்த்தெழுதல் என்பது வரைக்கும் செல்கிறது. நான்காம் பாகம் பெந்தெகொஸ்தே நாள் தொடங்கி, கடந்த பத்தொன்பது நூற்றாண்டுகள் மற்றும் இன்றைய தேதி வரையிலான திருச்சபை அனுபவங்களையும், அதற்கு அப்பால் ஆயிரம் வருடங்களின் போதிருக்கும் மகிமையான முழுமையடைவதையும் குறித்து விவரிக்கின்றன.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பிரம்மாண்டமான தயாரிப்பானது சிருஷ்டிப்பை வேதாகமத்தின் பரந்த, பொதுவான கண்ணோட்டத்திலிருந்தும், அது முன்வைக்கும் தெய்வீக நோக்கத்திலிருந்தும் கையாண்டது. தேவன் மனிதனைத் தம்முடைய சாயலில் சிருஷ்டித்து, அவனை பரதீசில் வைத்தபோது, அது தெய்வீக நோக்கத்தின் முடிவாக இருக்கவில்லை, மாறாக அதன் ஆரம்பமாக மட்டுமே இருந்தது. ஆதாம் பாவம் செய்வதற்கு முன்பு எப்படி பூரணராக இருந்தாரோ அதுபோல பூரணர்களாக இருக்கும் மனுக்குலத்தால் பூமி முழுவதும் நிரம்பி, பரதீஸ் பூமியின் எல்லை வரை நீட்டிக்கப்படும் போதுதான் ஆதியில் தொடங்கப்பட்ட சிருஷ்டிப்பு வேலை முழுமையாக நிறைவடையும்.
சிருஷ்டிப்பு சம்பந்தமான இந்தத் தம்முடைய நோக்கத்தின் முழுமையை தேவன் ஆதாமிடம் பின்வரும் வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருந்தார், “நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்திக்கொள்ளுங்கள்.” (ஆதி. 1:28) ஒருவேளை ஆதாமும் அவருடைய சந்ததியும் பரிபூரணராக இருந்திருந்தால், படிப்படியாக, தேவைக்கேற்ப, அவர்கள் பூமியைக் கீழ்ப்படுத்தி, முழு பூமியையும் ஏதேன் போன்ற பரதீசாக மாற்றி, எல்லா இடங்களிலும் ஜனங்கள் குடியேறி, ஏதேன் எல்லைகளை விரிவுபடுத்தி இருப்பார்கள். அப்போது தெய்வீகச் சிருஷ்டிப்பு நிறைவடைந்திருக்கும்.
இந்தத் தெய்வீகத் திட்டத்தில், பாவம் தலையிடும் என்பதை கர்த்தர் முன்னறிந்திருந்தார். ஆரம்பத்திலிருந்தே, அவருடைய ஞானம் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது, இதன் மூலமாக பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளுவதற்கு முன்பாக மனிதன் ஆறு நாட்கள் (ஒவ்வொன்றும் ஆயிரம் ஆண்டுகள்) கடினமாக உழைத்து, முகத்தின் வியர்வை சிந்தி, தோல்வி பல காண வேண்டும் எனத் திட்டம்பண்ணப்பட்டது. ஆனால், ஏழாவது நாளில் (ஆயிரம் ஆண்டுகள்) மனுக்குலத்தில் விருப்பமும் கீழ்ப்படிதலும் உள்ளவர்களைப் பாவம் மற்றும் மரண நிலைகளிலிருந்து பரிபூரணத்திற்கு மீட்டெடுத்து, மேம்படுத்தி, அதேசமயம் ஏதேன் எல்லையை உலகம் முழுவதும் விரிவுபடுத்துகிற ஓர் இரட்சகரையும் மாபெரியவரையும் வழங்குவதற்கு தேவன் ஆரம்பத்திலிருந்தே சித்தங்கொண்டிருந்தார்.
சுருக்கமாக சொன்னால், பாவத்தினிமித்தமாக சர்வவல்லவர் தம்முடைய ஆதி நோக்கத்தைச் சிறிதளவும் மாற்றிக்கொள்ளவில்லை. மாறாக, அவர் தம்முடைய திட்டத்தை இந்த நிலைமைகளுக்கு ஏற்ப சரிப்படுத்திக்கொண்டார். பாவத்தின் அனுமதியானது உண்மையில், அதன் கீழ்நோக்கிய போக்கையும், சிருஷ்டிகரின் நீதி அன்பு வல்லமையையும் குறித்து மனுஷருக்கும் தேவதூதருக்கும் விளக்கிக்காட்டும் ஒரு சிறந்த, நித்திய பாடமாக இருக்கப்போகிறது. ஆயிரமாண்டின் முடிவில், பாவத்தை விரும்புபவர்கள் அனைவரும் இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படும்போது, உலகத்தின் சிருஷ்டிப்பு வேலை முழுமையடையும், பூரணமடையும் – மனிதன் மீண்டும் தேவ சாயலில் காணப்படுவான்.
தேவன் தம்முடைய சிருஷ்டிகளுக்காக வைத்திருக்கும் அன்பான மற்றும் ஞானமான திட்டத்தைப் பதிவு செய்யும் வரலாற்றின் இந்த விரிவான வேதாகம விவரங்கள், அதே பெயரில் ஒரு புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டு, 1914ம் வருஷத்தில் வெளியிடப்பட்டது. “சிருஷ்டிப்பின் புகைப்பட நாடகம்” எனும் இந்தப் புத்தகத்தில், பல்வேறு தலைப்பிடப்பட்ட ஸ்லைடு படங்கள் ஒருபுறமும், பூமியின் சிருஷ்டிப்பு துவக்கி இயேசு கிறிஸ்துவின் 1,000 ஆண்டு அரசாட்சி இறுதி வரைக்கும் தேவனுடைய திட்டத்தின் முன்னேற்றத்தை வரிசைக்கிரமமாக விளக்கும் விளக்கங்கள் மறுபுறமும் காணப்படுகின்றன.
இந்தப் புத்தகம் 1914ல் அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் செய்த புகைப்பட நாடக நிகழ்ச்சிகளில் விநியோகிக்க வெளியிடப்பட்ட அசல் காட்சி புத்தகத்தின் வரலாற்று மறுபதிப்பாகும். மூல புத்தகம் மெஜந்தா மையில், நுண்பதிவுப்படங்களுடன் (halftone pictures) அச்சிடப்பட்டிருந்தது. இது முதலில் கெட்டி அட்டை மற்றும் மென்னட்டை என இரண்டிலும் வெளியிடப்பட்டது. இந்த மென்னட்டை மறுபதிப்பானது சில முக்கியமான வேறுபாடுகளுடன் கவனமாக மறுபதிப்பு செய்யப்பட்ட பதிப்பாகும். அச்சிடப்பட்ட அட்டையிலிருந்து அசல் கலைப்படமானது கவனமாக மீண்டும் வரையப்பட்டது. மூல தயாரிப்பிலிருந்து அசல் கண்ணாடி ஸ்லைடுகளை ஸ்கேன் செய்து கவனமாக மீட்டமைப்பதன் மூலமாக படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணாடி ஸ்லைடுகள் மூல தயாரிப்புக்காக கையால் வரையப்பட்டு, வர்ணம் பூசப்பட்டன. அசல் நிறங்கள் மற்றும் விவரங்கள் முடிந்தவரை கவனமாக பாதுகாக்கப்பட்டன, கீறல்கள் மற்றும் விரிசல்கள் மின்னணு முறையில் அகற்றப்படுகின்றன. கண்டுபிடிக்க முடியாத ஏழு கண்ணாடி ஸ்லைடுகளைத் தவிர, புத்தகத்தில் உள்ள அனைத்து படங்களுமே, 1914 தயாரிப்பில் காணப்பட்ட உண்மையான, அசல் கண்ணாடி ஸ்லைடுகளின் பிரதிகள் ஆகும். இது படிக்கக்கூடிய வகையில் மீண்டும் அச்சடிக்கப்பட்டுள்ளதே ஒழிய, மாறாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்தப் புத்தகம் அதன் வரலாறுரீதியான முக்கியத்துவத்திற்காக மட்டுமல்லாமல், வேத வாக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேவனுடைய திட்டத்தைப் பற்றிய விரிவான விளக்கத்திற்காகவும்கூட மிகவும் அற்புதமான புத்தகமாக உள்ளது. இது ஆதியாகமம் புத்தகத்தில் உள்ள சிருஷ்டிப்பின் கதை துவக்கி, வெளிப்படுத்தல் வரையிலான தேவனுடைய திட்டத்தை முன்வைத்து, அதன் மூலமாக வரலாற்றையும் விளக்குகிறது. நன்றி!
Source: https://www.bibletoday.com/archive/photodrama_of_creation.htm