மனித சுபாவம் ஆறுதல்பெற ஏங்குமா?

ஆகஸ்ட் 2024

Q334:1

கேள்வி: (1908) – 1 – மற்றவர்களின் ஆறுதலுக்காக ஏங்குவது என்பது மனித சுபாவத்தினுடைய இயல்பா? இப்படியாக இருக்குமானால், ஒருவேளை மற்றவர்களிடம், இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துவினுடைய சரீரத்திலுள்ள மற்ற உடன் அங்கத்தினர்களிடம்கூட நம்முடைய பிரச்சனைகளைக்குறித்துச் சொல்வதைத் தவிர்த்துக்கொள்வது என்பது, தேவனிடத்தில் நம்மை நெருக்கமான உறவிற்குள் கொண்டுவந்து, அவருடைய புயங்கள்மீது மட்டும் நாம் சார்ந்திருக்க உதவுமா?

பதில்: கேள்வியினுடைய முதல் பாகத்திற்கு ஆம்! என்று நான் பதிலளிக்கின்றேன். நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்தமட்டும் அவரவர் பாரங்களைச் சுமக்க நாடவேண்டும் என்றும், இதோடுகூட மற்றவர்களின் பாரங்களையும் சுமக்க நாடவேண்டும் என்றும் அப்போஸ்தலனின் அறிவுரைக் காணப்படுகின்றது. தனக்கென்றுள்ள சொந்த பாரங்களைப் பெற்றிருக்கும் ஒருவன், அவைகளைச் சுமப்பதற்கு முயற்சிக்கின்றவனாகவும், அதற்குக் கர்த்தருடைய ஒத்தாசையைப் பெற நாடுகின்றவனாகவும், அதேசமயம் மற்றவர்களுக்கும் அவர்களது பாரங்களின் விஷயத்தில் உதவுவதற்கு நாடுகின்றவனாகவும் மற்றும் இதற்கு முன்வருபவனாகவும் இருக்கும்போது, இதனிமித்தம் அவன் தனது பாரங்கள் மிகவும் இலகுவாக இருப்பதையும், ஆசீர்வாதமாக இருப்பதையும் உணர்வான். ஆகையால் நம்மில் ஒவ்வொருவரும் அவரவர் பாரங்களைக் கூடுமானமட்டும் சுமப்பதற்கு நாடுவதும், பின்னர் வேறு யாருக்கேனும் உதவுவதும் நமக்கான தகுதியான மனநிலையாகக் காணப்படுகின்றது; இன்னுமாக நம்முடைய பாரங்களைக்குறித்து அதிகமாய் யோசித்துக் கொண்டேயிருந்து, அதில்தானே மூழ்கிப்போகாமல் இருக்கவேண்டும்; நமக்குத்தான் எல்லாக் கஷ்டங்களும், எல்லாப் பிரச்சனைகளும், எல்லாப் பாரங்களும் காணப்படுகின்றன என்று கற்பனை பண்ணிக்கொள்ளாமல் இருந்து, நம்மைச் சுற்றி எத்தனை ஜனங்கள் பிரச்சனையில் காணப்படுகின்றனர் என்று சுற்றிப்பார்க்க வேண்டும்; இப்படிப் பார்ப்பீர்களானால், உங்களைவிட அதிகமான பாரங்களை உடையவர்களாக அநேகர் இருப்பதைக் காண்பீர்கள். ஆனால் இப்படிப் பார்ப்பதற்கு முன்பு, உங்கள் பிரச்சனைதான் மிகப்பெரிய பிரச்சனைபோல் உங்களுக்குத் தோற்றமளித்திருக்கும். ஆனால் அதற்கென்று உங்களுக்கோ, எனக்கோ மற்றவரிடமிருந்து ஆறுதல் ஒருபோதும் கிடைக்காது என்று நான் (சகோ. ரசல்)

சொல்வதாக புரிந்துகொள்ளக்கூடாது; மாறாக இப்படி நாம் நடந்துகொள்ளும்போது, நாம் முன்புபோல் (மற்றவரிடமிருந்து) ஆறுதலுக்காக எதிர்பார்த்திருக்கமாட்டோம்; நம்முடைய பாரங்களை நாமே சுமக்க நன்கு முயற்சி செய்துகொண்டிருப்போம். இப்படி நாம் அங்கும் இங்குமாக ஆறுதலைத் தேடாமல் இருந்தாலும், கர்த்தர் நமக்கு சில ஆறுதல்களை அளிக்கக்கூடிய யாரோ ஒருவரை அநேகமாக அனுப்பிவைப்பார். எந்த விதத்தில் ஆறுதல் வந்தால் நல்லது என்று கர்த்தர் காண்கின்றாரோ, அப்படியான ஆறுதல் கடந்துவரும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சரீரத்தின் மாபெரும் தலையாக இருக்கின்றார் என்பதும், சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினரும் அவரது மேற்பார்வை மற்றும் பராமரிப்பின்கீழ்க் காணப்படுகின்றனர் என்பதும் உங்களுக்கு ஞாபகமிருக்கும். உங்களது விரல் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டுவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள், அந்த விரல் என்ன செய்யும்? பாதத்திடம்போய் உதவிகேட்குமா இல்லை! மற்றக் கரமிடம்போய் உதவிகேட்குமா? இல்லை! சரி அந்த விரல் என்னதான் செய்யும்? “எனக்குக் காயம் ஏற்பட்டுள்ளது” என்று அந்த விரலின் “புலனுணர்வு நரம்புகள்” மூளைக்குச் செய்தி அனுப்பிவைக்கின்றது. மூளையோ மற்றக் கரத்தை நோக்கி: “போய் அந்த விரலுக்கு உதவிசெய்” என்று செய்தி அனுப்பிவைக்கின்றது. இப்படியாகப் பார்க்கும்போது கர்த்தரிடமே நம்முடைய பிரச்சனைகளைக்குறித்துச் சொல்லவேண்டும்; உதவிக்காக நாம் அவரையே நோக்கிப்பார்க்க வேண்டும்: பின்னர் நமக்குத் தேவையானது எதுவோ, அதை எதிர்பார்த்திருக்க வேண்டும்; அது சரீரத்தினுடைய உடன் அங்கத்தினர்களிடமிருந்து வரலாம்; மேலும், அவருடைய நாமத்தில் நாம் ஒருவரையொருவர் ஆறுதல்செய்யவும், ஒருவருக்கொருவர் உதவிசெய்யவும் தலையானவர் விரும்புகின்றார் என்பதை அறிந்தவர்களாக, இவ்விஷயத்தில் சரீரத்தின் உடன் அங்கத்தினர்களென நாம் அனைவருமே தலைக்குக் கீழ்ப்படியும் மனநிலையில் காணப்பட வேண்டும்; இப்படி இருப்போமானால், நாம் ஒருவருக்கொருவர் நன்மைசெய்ய முயற்சிக்கின்றவர்களாகவும், ஒருவருக்கொருவர் ஊழியம்புரிய வரும் வாய்ப்புகளுக்காகத் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பவர்களாகவும் காணப்படுவோம். இதுவே மிகுந்த ஆசீர்வாதங்களையும், மிகுந்த சமாதானத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும் கண்டடைவதற்கான வழியாகும்; இன்னுமாக நம்முடைய சொந்த பாரங்களைச் சுமப்பதற்கும், மற்றவர்களுடைய பாரங்களைக் கூடுமானமட்டும் சுமப்பதற்கும், மற்றவர்களை ஆறுதல்செய்வதற்கும், மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கும் நம்மால் முடிந்தமட்டும் பிரயாசப்படுகின்றவர்களாகக் காணப்படுவோம்.

– பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்