சான் பிரான்சிஸ்கோவிலிருந்து, நியூயார்க்கிற்கு நடைபயணமாகச் சென்ற ஒரு மனுஷன் பின்வருமாறு கூறியுள்ளார். அம்மனுஷன் தனது அனுபவத்தைக்குறித்துப் பகிர்ந்துகொண்டபோது, உயர்ந்ததும் கடின மானதுமான இராட்சத மலைகளை, தான் ஏறி கடந்துவந்தது தனக்கு மிகவும் கடினமான அனுபவமாக இருக்கவில்லை என்றார்; இன்னுமாக நீண்ட பரப்பளவிலும், மிகுந்த வெப்பத்துடனும் காணப்பட்ட பாலைவனத்தில் நடந்ததோ அல்லது பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளையும், நீரோடைகளையும் கடந்ததோ தனக்குக் கடினமான அனுபவமாக இருக்கவில்லை என்றார். ஆனால் தன்னைக் கிட்டத்தட்ட தோற்கடித்தது, தனது காலணிக்குள் (செருப்பிற்குள்) புகுந்த மணல்தான் என்றார்.
வாழ்க்கையில் நமக்கு வெளியிலிருந்து வரும் பிரச்சனைகள் / சவால்கள், நம்மை ஜெயிக்கும் அல்லது நம்மை வீழ்த்தும் சத்துருக்களல்ல; மாறாக நம்மை எரிச்சலூட்டி, நமக்கு மன உளைச்சல் உண்டாக்கும் மணல் துகள்கள்போன்று காணப்படும் சிறிய விஷயங்களே நமக்கான சத்துருக்களாகக் காணப்படுகின்றன. நமது வெற்றி அல்லது தோல்வியை நிர்ணயிப்பது வாழ்க்கையின் சந்தர்ப்பச்சூழ்நிலைகள் அல்ல, மாறாக வாழ்க்கையை நாம் எதிர்கொள்ளும் மனநிலையினாலேயே நிர்ணயிக்கப்படுகின்றது.
நம்முடைய வாழ்க்கை பயணத்தில், நாம் அனைவரும் சில கடினமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். “சிரமங்கள்” எனும் மலைகளை நாம் ஏறவேண்டியிருக்கும்; “ஏமாற்றம்” எனும் நெருப்பான பாலைவனங்களை நாம் கடக்க வேண்டியிருக்கும்; “எதிர்ப்புகள்” எனும் ஆறுகளை நாம் தாண்டி கடந்துபோக வேண்டியிருக்கும். ஒருவேளை சரியான மனப்பான்மையும், சரியான ஆவியும் நம்மிடத்தில் இருக்குமானால், பிரயாணத்தை நாம் வெற்றிகரமாக முடிப்பவர்களாக இருப்போம். சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், நாம் எதிர்கொள்ளும் “விஷயங்கள்” அல்ல, மாறாக அவற்றை நாம் “எதிர்கொள்ளும் விதமே” உண்மையில் முக்கியமானதாகும். காலணிக்குள் (செருப்பிற்குள்) மணல் புகாமல் பார்த்துக்கொள்வோமானால், வெற்றிகரமாக நடந்துசெல்லமுடியும்.
– Harold N. Geistweit. DEVOTIONS, BIBLE STUDENT’S LIBRARY.