அராஜகமான/கொடுங்கோன்மையான செயல்கள் பல வடிவங்களில் வெளிப்படுகின்றது. தங்கள் வியாபாரத்திற்கு அல்லது சமுதாயத்திற்கு அல்லது தங்கள் குடும்பத்திற்கு எது சிறந்தது என்று காணமுடிகின்ற விறுவிறுப்பான மற்றும் சுறுசுறுப்பான ஜனங்களாலேயே இந்த அராஜகம்/ கொடுங்கோன்மை பெரும்பாலும் வெளிப்படுத்தப்படுகின்றது. அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய நாட்களில், தான் கொடுங்கோலனாய் இருந்ததாக/அராஜகம் பண்ணினதாக ஒப்புக்கொண்டிருக்கின்றார் (அப்போஸ்தலர் 26:10-11-ஆம் வசனங்களைப் பார்க்கவும்). இவரைப்போன்று உண்மையை ஒப்புக் கொள்வதற்கும், இன்னுமாக இவரைப்போன்று சத்துருவைத் தோற்கடித்த தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கும் வலுவான மனம்படைத்த அனைத்து ஆண்களும், பெண்களும் முனைவார்களானால், அது எவ்வளவு நலமாயிருக்கும்.
பெரும்பாலும் நல்லெண்ணம்கொண்ட, தெளிந்த சிந்தையுடைய, இன்னுமாக வெற்றிநடைப்போட்ட மனிதர்களே கொடுங்கோன்மையான செயல்களைச் செய்கின்றவர்களாகக் காணப்படுகின்றனர்; அதாவது “எது சிறந்தது என்று தந்தையாகிய எனக்குத்தான் தெரியும்” எனும் மேலாதிக்க மனப்பான்மை உடையவர்களே பெரும்பாலும் கொடுங்கோன்மையான செயல்களைச் செய்கின்றவர்களாகக் காணப்படுகின்றனர். இது ஒருவகை அடக்குமுறையாகும்/ கொடுங்கோன்மையாகும்.
அடுத்ததாக நோயுற்றவரின் கொடுங்கோன்மையை/அராஜகத்தைப் பார்க்கலாம். உடல் அல்லது மனநலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட உறவினரைக் கவனிக்கும் சுமையினைப் பல குடும்பத்தினர் சுமந்து வருகின்றனர். குடும்பத்தார் அந்தச் சுமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டு, முணுமுணுப்பின்றியும், சிலசமயங்களில் மகிழ்ச்சியுடனும் பணிவிடை செய்கின்றனர். மாற்றமுடியாத தனது நிலைமையினை நோயாளி மனதளவில் ஏற்றுக்கொண்டு காணப்படுவாரானால், இது குடும்பத்தாரின் பாரச்சுமையினை இலகுவாக்கிடும். ஆனால் நோயாளி, தொடர்ந்து தனது நிலைமைக்குறித்துப் புலம்பி கொண்டிருப்பவராகவும், குடும்பத்தின் மற்ற அங்கத்தினர்களுக்குக் கொடுக்கப்படுவதைவிட, தனக்கே அதிக கவனம் கொடுக்கப்பட வேண்டும் என்று சண்டையிடுகிறவராகவும் இருப்பாரானால், இது நோயுற்றவரின் கொடுங்கோன்மையாக/ அராஜகமாகக் காணப்படும்.
துக்கத்தினால் கொடுங்கோன்மை செய்தல்/அராஜகம் செய்தல் என்ற ஒன்றும் காணப்படுகின்றது. நாம் மிகவும் நேசித்த ஒருவரை மரணத்தில் இழக்கும்போது, அதினிமித்தம் துக்கமடைவதும், துயரத்தை வெளிப்படுத்துவதும் இயல்பான காரியமாகவும், சரியான காரியமாகவும் காணப்படுகின்றது. இந்த அனுபவத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனாலும் இந்தத் துக்கம் ஒருவரது வாழ்க்கையை முழுமையாக ஆக்கிரமிக்க அனுமதிப்பதும், இதினிமித்தம் மற்றவர்களின் வாழ்க்கையை சீரழிக்க/கசப்பாக்க அனுமதிப்பதும் முறையற்ற காரியமாய் இருக்கும்.
கொடுங்கோன்மைக்கு/அராஜகத்திற்குத் தீர்வு ஒன்று காணப்படுகின்றது. துக்கத்தின் பிடியில் மூழ்கித் தன்னையே வருத்திக்கொள்வதை விட்டு, சுயநலத்தைத் துறந்து, மற்றவர்களின் நலனில் அக்கறைகொள்ளும் “மனநிலையை அடைவதே” அந்தத் தீர்வாகும். இதுவே அநேக துணிச்சலான ஆன்மாக்கள் கொண்டிருக்கும் பலமுள்ள மனநிலையாகக் காணப்படுகின்றது. இந்த மனநிலையினை நாமும் பெற முயல்வது என்பது, கொடுங்கோன்மை எனும் இந்தப் பொதுவான சத்துருவை நாம் எதிர்கொள்ளுவதற்கு நம்மை ஊக்குவித்து ஆயத்தப்படுத்துகின்றதாகக் காணப்படும்.
-The Herald Magazine, 1987