அந்த ஊழியக்காரன் பற்றின சில வரிகள்

நவம்பர் - 2024

பதிப்பாசிரியர் (அதாவது சகோ. ரசல் அவர்கள்) அவரது சிறு வயதில் சரீர வலிமைக்காக அல்லது ஆரோக்கியத்திற்காக வேண்டிக்கொண்டதாக ஞாபகமில்லை என்றே தெரிவித்திருக்கின்றார். சகோ. ரசல் அவர்கள், உடல் வலிமை குறைவாய் இருந்த நேரங்களும், இன்னுமாக அவருக்கு இருந்த உடல் வலிமையைக்காட்டிலும் அதிக வலிமை தேவைப்படும் ஊழியத்திற்கடுத்த வாய்ப்புகள் வந்திருந்த நேரங்களும் அவரது வாழ்வில் இருந்துள்ளன. அம்மாதிரியான தருணங்களில், அவர் தேவனிடம் ” ஜெபத்தில் ” சென்று ” தேவையான வலிமையும், ” தேவனால் தகுந்தது எனக் கருதப்படும் ” மற்ற விஷயங்களும் ” தனக்கு வழங்கப்படும் என்று விசுவாசிப்பதாகத் தெரிவிப்பார்; ஆனால் ஒருவேளை தான் ” திருப்திகரமான ” ஊழியம் செய்யமுடியாதபடி இருப்பதுதான் சிறந்தது என்று தேவன் கருதுவாரானால், அப்பொழுதும் தேவன் தனக்கு அனுமதிக்கும் எதுவும் சிறந்த அனுபவமாகவே இருக்கும் என்று தான் அறிந்திருப்பதினால், தனது பங்கைச் செய்துவிட்டு, மீதியைத் தேவனிடமே விட்டுவிடுவதாகக் கூறுவார்.

இப்படிச் செய்வது என்பது, சகோ. ரசல் அவர்களுக்கு எப்போதுமே நிறைவைக் கொடுத்திருக்கின்றது. அவரது நாற்பது ஆண்டு ஊழியக்காலத்தின்போது, உடலில் வலிமை இல்லை என்பதினால் அவர் எந்த ஊழியக்கூட்டத்தையும் / ஊழிய வாய்ப்பையும் ஒருபோதுமே தவறவிட்டதில்லை; அவரது நண்பர்கள் அவரிடம்: “சகோதரனே உங்களால் இன்று செய்தி கொடுக்க முடியாது!” என்று சொல்லுமளவுக்கு அவரது உடல்நிலை காணப்பட்ட தருணங்களும் இருந்துள்ளன. ஆனால் சகோ. ரசல் அவர்களோ: “தேவன் எனக்கு பெலன் தருவாரானால், நான் கூட்டம் நடைபெறவிருக்கும் இடத்திற்குச் செல்வேன்; மேலும் செய்தி கொடுப்பதற்குத் தேவையான பெலத்தைத் தருவார் என்று அவர் மீதே விசுவாசம் வைப்பேன்” என்றே எப்போதும் கூறுவார். மேடையில் ஒருமுறை நிற்கையில் சகோ. ரசல் அவர்கள் கிட்டத்தட்ட மயக்கம் அடையும் நிலைக்குப் போய்விட்டார், ஆனாலும் போதுமான கிருபை அவருக்கு ” எப்போதுமே ” காணப்பட்டது. திரைக்கு இப்பக்கத்தில் இருக்கும்வரை, தனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கின்றதோ, அப்போதெல்லாம் ஊழியம் ஆற்ற வேண்டுமென்று சகோ. ரசல் அவர்கள் தீர்மானமாய்க் காணப்பட்டார். செய்தி கொடுப்பதற்குரிய வாய்ப்பினை ஒருவேளை தேவன் தனக்குத் தருவாரானால், ” தேவையான பெலத்தையும் ” தேவன் அருளுவார் என்று சகோ. ரசல் அவர்கள் நிச்சயத்துடன் காணப்பட்டார்.

– R5200