களைப்பாகக் காணப்பட்ட பாஸ்டர்

மே - 2024

1913-ஆம் வருடத்திற்குரிய மாநாடு அறிக்கையில், பாஸ்டர் ரசல் குறித்த இரண்டு சாட்சிகள் சகோ. Hirsch-அவர்களினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தெரிவித்ததாவது:

முதல் சாட்சி: “ஒன்று செய்கிறேன். ;” “இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்” (பிலி. 3:13; 1 கொரி. 2:2), மேற்கூறப்பட்டுள்ள வசனங்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக நம்முடைய அருமை மீட்பரும், நமது அன்புக்குரிய பாஸ்டர் ரசல் அவர்களும் திகழ்ந்துள்ளனர்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு, பிட்ஸ்பர்க் நகரில் காணப்பட்ட பாஸ்டர் ரசல் அவர்களின் அலுவலகத்தில், அவர் அமர்ந்து படிக்கும் அறைக்குள் நான் (சகோ. Hirsch) நுழைந்தது எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றது. பணிபுரிந்துகொண்டிருந்த அவர் தலையைத் தூக்கி, அழகாகப் புன்னகைத்தார்; முகத்தில் களைப்பு தெரிந்தாலும், அம்முகத்தில் புன்னகை மலர்ந்தது. பின்னர் நான்: “இன்று மதியம் நீங்கள் களைப்பாக இருப்பதுபோன்று தெரிகின்றதே” என்றேன். பாஸ்டர் ரசல் பொதுவாக ஒப்புக்கொள்ளமாட்டார்; ஆனால் அன்று, “நான் களைப்பாகத்தான் இருக்கின்றேன்” என்றார். மேலும் அவர்: “சாதாரணமான களைப்பல்ல, என்னுடைய தசைகள்/உடல் முற்றும் முழுவதும் களைப்படைந்துள்ளது; எனது தசைகள்/உடல் மட்டுமல்ல, எனது எலும்புகளும்கூட முற்றும் முழுவதும் களைப்படைந்துள்ளது; ஆனாலும், இராஜ்யம் ஸ்தாபிக்கப்படுவதுவரையிலும், நான் ஒய்வெடுக்கப்போவதில்லை” என்றார்.

பிற்பாடு இதைக்குறித்து நான் (சகோ. Hirsch) உட்கார்ந்து யோசித்துப் பார்த்தபோது அழுதேன். அவரது தசைகள்/உடல் முற்றும் முழுவதும் களைப்படைந்துள்ளதாம் அவரது எலும்புகளெல்லாம் முற்றும் முழுவதும் களைப்படைந்துள்ளதாம் ஆனாலும் அவர் இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்வரை ஒய்வெடுக்கமாட்டார் என்று கூறினார். நான் ஒருபோதும் இப்படியாகவெல்லாம் களைப்படைந்ததில்லை; ஒருவேளை அந்த அளவுக்குக் களைப்படைவேனாகில், விடுமுறை/விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்றுதான் நான் எண்ணியிருந்திருப்பேன். உண்மையைச் சொல்லப்போனால், நான் சில நாட்களுக்கு முன்புதான் விடுப்பு எடுத்திருந்தேன். நான் சற்று ஓய்வெடுக்க வேண்டிய நிலையில்தான் காணப்பட்டேன்; நான் சரீரத்திலும், ஆவிக்குரிய வாழ்க்கையிலும் சோர்வுடன் இருந்தபோதிலும், உடனே ஊழியத்திற்குத் திரும்பிவிட்டேன். திரையின் இப்பக்கத்தில், நான் காணப்படுவது வரையிலும், நான் இனிமேலும் விடுப்பு என்ற ஒன்றை எடுக்கமாட்டேன் என்று தீர்மானம் எடுத்துக்கொண்டேன். நிச்சயமாகத் திரையின் மறுபக்கத்திலும் ஓய்வு எடுக்கப்போவதில்லை.

இரண்டாம் சாட்சி: “பாஸ்டர் ரசல் அவர்கள் ஓய்வே எடுக்காமல், அதிகாலை முதல், இரவு 11 மற்றும் 12 மணி வரையிலும் ஊழியங்களை ஆற்றும் சகோதரன் ஆவார். மேலும், தான் கர்த்தருடைய சித்தத்தை நிறைவேற்றியுள்ளார் என்ற நிச்சயம் ஏற்பட்டாலேயே ஒய்வெடுத்து உறங்குவார்.” இச்சாட்சியினை நிறைவுசெய்த பிற்பாடு சகோ. Hirsch-அவர்கள் தொடர்ந்து தெரிவித்ததாவது: “ஒருவேளை நம்மால் இரவு நேரம் தூங்க முடியவில்லையெனில், ஒருவேளை அந்த நாளில் நாம் கர்த்தருடைய சித்தத்தைச் செய்யாமல் இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம். நாம் அனைவரும் மகிமையின் மகா இராஜனை இவ்வுலகத்திற்கு அறிமுகம் செய்கின்றவர்கள். இது எத்துணை மாபெரும் சிலாக்கியம்! மேலும், நாமும் நம்முடைய கைகளுக்கு அகப்படுவது எதுவோ, அதை முழுப்பெலத்துடன் செய்யவேண்டியவர்களாய் இருக்கின்றோம்!”

-1913 Convention Report