தீர்க்கதரிசியாகிய எலியா கிரியைகளின் தீர்க்கதரிசியாகத் திகழ்ந்தார். நமக்குத் தெரிந்தவரை அவர் எதையும் எழுதவில்லை; ஆனால் இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை, ஏனெனில் எலியா மிக வேகமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் செயல்படும் நபராக இருந்தார். பொதுவாக, ஒரு விஷயத்தைப் பொறுமையாக அமர்ந்து எழுதுவதற்கு நிதானமும், அமைதியும் தேவைப்படுகின்றது. ஆனால், எலியா போன்ற அதிரடியான சீர்திருத்தவாதிகளிடம் இத்தகைய நிதானம் இருப்பதைவிட, காரியங்களை உடனே செய்துமுடிக்கும் வேகமே அதிகமாகக் காணப்படும். எனவே, அவர் புத்தகங்கள் எழுதாமல் போனதில் ஆச்சரியமில்லை. உணர்ச்சிமிக்க மற்றும் துடிப்பான சீர்திருத்தவாதிகள் பலர், எழுத்தாளர்களாகத் திகழும் வரம் அற்றவர்களாகவே இருந்திருக்கின்றனர். அவர்கள் இலக்கியவாதிகளாக இருப்பதை விட, ஆற்றல்மிக்க செயல்வீரர்களாகவே விளங்கியிருக்கின்றனர். தங்கள் காலத்தில் வாழ்ந்த ஜனங்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில், அவர்கள் தங்களை உணர்ச்சிப்பூர்வமான அர்ப்பணிப்புடன் முழுமையாக ஒப்புக்கொடுத்துக் காணப்பட்டார்கள். அவர்களில் பலர் வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்படும் வேத புத்தகங்களில், தங்கள் பெயர்களைப் பொறித்துவைக்காமல் இருந்திருக்கலாம்; இருப்பினும், சக ஜனங்களின் நல்வாழ்விற்காக அவர்கள் ஆற்றிய நிலையான கிரியைகளின்/மறையாத நற்பணிகளின் விளைவாக அவர்கள் மறையாத வரலாற்றுத் தடையங்களாக என்றும் வாழ்ந்துகொண்டு இருகின்றார்கள்.
– BIBLE STUDENT ARCHIVES