விண்மீன்கள் காரிருள் சூழ்ந்துகொள்ளும் இரவு வேளையின்போதுதான் மிக அதிகமாய்ப் பிரகாசிக்கின்றன; நறுமணப் பொருட்கள் நசுக்கப்படும்போதுதான், அவை சிறந்த நறுமணத்தை வெளிப்படுத்துகின்றன; இளமரங்கள் அசைக்கப்படும்போதுதான், அவை இன்னும் வேகமாய் வேரூன்றுகின்றன; தங்கம் தேய்க்கப்படும்போதுதான், அது இன்னும் அதிகமாய் மிளிர்கின்றது.
தேவனுடைய பிள்ளைகள் அனைவருடைய நிலையும் இவ்வாறே இருக்கின்றது. அவர்கள் மிகக் கடுமையாகச் சோதிக்கப்படும்போதுதான், மிகச் சிறந்த வெற்றியாளர்களாய் உருவெடுக்கின்றார்கள்; அவர்கள் மிக அதிகமாய் உபத்திரவப்படும்போதுதான், மிக உன்னதமான மகிமையை அடைகின்றார்கள். மனுஷருடைய பார்வையிலும், இன்னுமாக தங்களுடைய பார்வையிலும் மதிப்பற்றவர்களாய் இருக்கும்போதுதான், தேவனுடைய பிள்ளைகள் தேவ தயவை மிக அதிகமாய்ப் பெற்று, அவருக்கு மிகவும் பிரியமானவர்களாய் விளங்குகின்றார்கள்.
அவர்களுடைய போராட்டங்களைப் போலவே, அவர்களுடைய வெற்றிகளும் அமைகின்றன; அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப்போலவே அவர்களது ஜெயமும் அமைகின்றன.